சேலம் அஸ்தம்பட்டி கேகே நகரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவருடைய மகள் ஆர்த்தி (19). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அசோக் (25). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அசோக்கும், ஆர்த்தியும் காதலித்து வந்தனர்.
நேற்று (பிப். 13) ஆர்த்திக்கு பிறந்த நாள் என்பதால், அவர் தனது பிறந்த நாளை காதலனுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்திருந்தார். மறுநாள் (பிப். 14) காதலர் தினம் வருவதால், இரண்டு நாள்களும் பெங்களூருவில் காதலனுடன் தங்கியிருக்க முடிவு செய்திருந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது, தன்னுடைய பிறந்த நாள் பரிசாக தனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்குமாறு ஆர்த்தி கேட்க, அசோக்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி ஆர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவருக்கு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்ட அசோக், அவ்வப்போது வண்டியின் ஹேண்டில்பாரை பிடித்து மோட்டார் சைக்கிள் ஓட்ட பயற்சி அளித்தபடி சென்றார்.
தீவட்டிப்பட்டி அருகே சென்றபோது திடீரென்று ஆர்த்தி ஆர்வக்கோளாறில் வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார். மின்னல் வேகத்தில் வண்டி பறந்தது. ஒரு கட்டத்தில், நிலைதடுமாறிய ஆர்த்தி, திடீர் பிரேக் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில், ஆர்த்தி தூக்கி வீசப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் ஆர்த்தி சிக்கிக்கொண்டார். இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர், ஆர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியின் பிறந்த நாளன்று மரணம்தான் அவருக்கு பரிசாக அமைந்து விட்டதாகச் சொல்லி, அவருடைய பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.