Skip to main content

மகளை ஆணவக்கொலை செய்துவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை! சேலத்தில் பரபரப்பு!!

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

 


சேலம் அருகே, சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத பெற்றோர் மகளை சாதிய ஆணவக்கொலை செய்து தூக்கில் சடலத்தை தொங்கவிட்டுவிட்டு, தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

lo

 

சேலம் அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் ராஜ்குமார் (43). தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சாந்தி (35). ராசிபுரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ரம்யா என்கிற ரம்யலோஷினி (19) என்ற மகள் இருந்தார். இவர்களுக்கு தீனதயாளன் (17) என்ற ஒரு மகனும் உள்ளனர். 


ரம்யா, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை (மார்ச் 29, 2019) இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டனர். இவர்களில் தீனதயாளன் மட்டும் இரவு உணவை முடித்துவிட்டு, அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தூங்கச்சென்று விட்டான். 


ராஜ்குமார் தனது மனைவி, மகளுடன் ஒரே வீட்டில் தூங்கினார். இந்நிலையில், பாட்டில் வீட்டில் இருந்து தீனதயாளன் தன் வீட்டிற்கு சனிக்கிழமை (மார்ச் 30, 2019) காலை வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் யாரும் கதவைத் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, அவருடைய அக்காள் மற்றும் பெற்றோர் ஆகிய மூவரும் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

 

r


அவன் கதறி அழுத சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுபற்றி கொண்டலாம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


ரம்யாவுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டி, அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜ்குமார் தன் மகளிடம் கூறியதற்கு, அவர் மறுத்துள்ளார். தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், அவர் காதலிப்பதாகச் சொல்லும் இளைஞர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இந்த காதல் விவகாரம் தெரிந்த பிறகுதான் ரம்யாவுக்கு அவருடைய பெற்றோர் வரன் பார்க்கவே தொடங்கியுள்ளனர். சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த சில ஒரு மாதமாகவே பெற்றோருக்கும் ரம்யாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. 


இதனால், தன் மகளை கொன்றுவிட தீர்மானித்த ராஜ்குமார், திட்டமிட்டு தன் மகனை மட்டும் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு, மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இந்த கொலை விவகாரம் வெளியே தெரிந்தால் காவல்துறையில் சிக்கிக்கொள்வோம் என்பதால், ராஜ்குமாரும் அவருடைய மனைவி சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்