சேலம் அருகே, லாரியுடன் 2.50 டன் பயங்கர வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர், கடந்த 25 நாட்களுக்கு முன்பு சரக எல்லை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். தர்மபுரியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அதில், வைக்கோல் போருக்கு அடியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வெடி பொருட்களை எடுத்துச் செல்வதற்கான எந்த அனுமதி ஆவணங்களும் லாரி ஓட்டுநரிடம் இல்லை. அந்த லாரியில் இருந்து மொத்தம் 2.50 டன் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து லாரி ஓட்டுநர் இளையராஜாவை கைது செய்தனர். அவருடைய வாக்குமூலத்தின் பேரில் தர்மபுரியைச் சேர்ந்த கார்த்தி, தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கோவை வழியாக கேரளாவுக்கு வெடி பொருட்களைக் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இவை, யாருக்காக, எதற்காக கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து விசாரித்தபோது, அதுகுறித்து தகவல்கள் ஏதும் தங்களுக்குத் தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து லாரி ஓட்டுநர் உள்ளிட்ட மூவரையும், நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களில் கார்த்தி, தினேஷ் ஆகிய இருவரையும் 6 நாட்களும், இளையராஜாவை 3 நாட்களும் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த நிலையில் டிச.18ம் தேதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திவிட்டு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வெடி பொருட்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முருகேசன், மகேந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினருடன், கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.