சேலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு மகளிர் தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடியும், நடனம் ஆடியும் கொண்டாடினர்.
சர்வதேச மகளிர் தின விழா, சேலத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 8) களைகட்டியது. வார விடுமுறை நாள் என்பதால், பெண்கள் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தன்னார் அமைப்புகள் என்றில்லாமல், குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பிலும் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுபோன்ற விழாக்களை, விழிப்புணர்வு பரப்புரையாகவும் சிலர் மேற்கொண்டனர். ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பெண்கள் அமைப்பினர், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாகச் சென்றது, பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
சேலம் சமூக சேவை சங்கம் பெண்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. கோவையில் இருந்து பெங்களூருவுக்கு உதய் ஈரடுக்கு விரைவு ரயிலை பெண்களே இயக்கியதும் பெரிதும் ஈர்த்தது. அதேபோல், சேலம் கோட்டையில் உள்ள லெக்லர் தேவாலயத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு வழிபாடும் நடந்தது.
அதேபோல், சேலம் மாவட்டத்தில் 70 ஆயிரம் பெண்களை உறுப்பினராக கொண்டு செயல்பட்டு வரும் களஞ்சியம் நிறுவனத்தின் சார்பிலும் பல்வேறு வட்டாரங்களிலும் மகளிர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் பைரோஜியில் உள்ள வீரபாண்டி வட்டாரக் களஞ்சியத்தில் திட்ட அலுவலர் குணசுந்தரி தலைமையில் நடந்த மகளிர் தின விழாவில், ராஜாபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ், மணியக்காரம்பாளையம் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். களஞ்சியம் மகளிர் குழு தலைவிகள், வீரபாண்டி வட்டார பணியாளர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி சில கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கிராமங்களில் அருகி வரும், அம்மனை வரவேற்கும் நாட்டுப்புறப்பாடல்களை கும்மியடித்து பாடி ஆடியது வெகுவாக ஈர்த்தது. ''ஒண்ணாம் கிரகம்மா கண்ணனூர் மாரி கல்வராயன் காளி... கிரகம் வந்து நிக்குதம்மா கண் திறந்து பாரு கண் திறந்து பாரு...'' என்று தொடங்கி, ''பத்தாம் கிரகம்மா கண்ணனூர் மாரி கல்வராயன் காளி...'' வரை ஒருவர் பாட, அதை மற்ற பெண்கள் பின்தொடர்ந்து வட்டமாக சுற்றிவந்து கும்மியடித்து பாடினர்.
அதைத்தொடர்ந்து, சினிமா பாடல்களுக்கான சிறுவர்களின் நடனமும் அரங்கேறியது. வட்டார பணியாளர்களும், ''காணங்கத்த மீனு வாங்கி...'' போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடியதும் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி, விழாவை நிறைவு செய்தனர்.
முன்னதாக, மணியக்காரம்பாளையம் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி பேசுகையில், ''பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவர்களை கவனமுடன் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்று தெளிவாக சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தையின் அப்பா, அண்ணன், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என எந்த ஆண் தொட்டாலும் அதன் உள்நோக்கம் பெண் குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால், எல்லோருடைய தொடுதலும் ஒன்றுபோல இருக்காது. ஆகையால் பெண் குழந்தைகள் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் யாரும் அவர்களை தொடாமல் பேச வேண்டும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். நாமும் அவர்களிடம் அப்படி தள்ளி நின்றுதான் பேச வேண்டும்,'' என்றார்.