சேலத்தில், மது அருத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கியது பிடிக்காததால் தம்பியே, அண்ணனை கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மணியனூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் யுவராஜ் (30). தகர பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோர் இறந்து விட்டனர்.
யுவராஜின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து அவர் தனது சித்தி தனலட்சுமியின் 17 வயது மகன், தாத்தா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். யுவராஜூடன் அவருடைய தம்பியும் தகர பெட்டி தயாரிக்கும் தொழிலில் உதவியாக இருந்து வந்தார்.
சிறுவனுக்கும், யுவராஜூக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சிறுவனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது. அதையறிந்த யுவராஜ், இனிமேல் மது அருந்தக்கூடாது என்று சித்தி மகனை யுவராஜ் அடித்து உதைத்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியன்று சிறுவனை மது அருந்தக்கூடாது என்று யுவராஜ் மீண்டும் கண்டித்துள்ளார். அதேநேரம், அன்று யுவராஜ் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு போதையில் வந்த சிறுவன், யுவராஜ் தலையில் கல்லைப் போட்டு அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தில் யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாகிவிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மது அருந்தக்கூடாது என்று அறிவுரை வழங்கிய அண்ணனை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் மணியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.