Skip to main content

கூலித் தொழிலாளியைக் கிணற்றில் தள்ளி கொலை; மனைவி, ஆண் நண்பர் கைது!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

salem husband wife incident police investigation

 

சேலம் அருகே, தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், ஆண் நண்பரும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சம்பா நகரைச் சேர்ந்தவர் ரவி (32). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி உதயா (28). இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், அக். 6- ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ரவி, இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை.

 

அக்.8- ஆம் தேதியன்று, சம்பா நகரில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ரவியின் சடலம் மிதப்பது தெரிய வந்தது. அந்தக் கிணறு சுமார் 60 அடி ஆழம் கொண்டது. ஏத்தாப்பூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ரவி, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து சடலத்தைக் கிணற்றில் வீசி எறிந்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.

 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமார் (24) என்பவருக்கும், ரவிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, ரவியின் மனைவியுடன் சதீஷ்குமாருக்குத் தவறான தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த ரவி, தனது மனைவி உதயாவை கண்டித்தார். அவர்களுக்குள் இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

 

கணவர் தன்னுடன் தகராறு செய்வதை உதயா, சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ரவியை தீர்த்துக் கட்டினால்தான் உதயாவுடன் தொடர்பில் இருக்க முடியும் என சதீஷ்குமார் திட்டம்போட்டார். 


அவருடைய திட்டப்படி, கடந்த 6- ஆம் தேதி ரவியை பணம் பாக்கி தொடர்பாகப் பேச வேண்டும் என்று ஏரிக்கரை பகுதிக்கு சதீஷ்குமார் அழைத்துள்ளார். அங்கு வந்த ரவியிடம் சதீஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

cnc

 

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், ரவியை அங்குள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து, சதீஷ்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த ரவியின் மனைவி உதயா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்