சேலத்தில், லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சொந்த ஊரில் பல இடங்களில் அசையா சொத்துகளை வாங்கி குவித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (57). சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநராக உள்ளார். இவருடைய அலுவலகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 52 பேரூராட்சிகளிலும் சாலை ஒப்பந்தப் பணிகள், குடிநீர் குழாய் பதித்தல், தெருவிளக்கு அமைத்தல், சாலைப்பணிகளுக்கு பில் தொகையை அனுமதிக்க அந்தந்த ஊராட்சிகளின் செயல் அலுவலர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில், டிச. 11- ஆம் தேதியன்று சேலத்தில் இருந்து கார் மூலம் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அரியானூர் அருகே அவருடைய காரை வழிமறித்து நிறுத்திய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், காரை சோதனையிட்டனர்.
காரில் இருந்து இரண்டு பைகளில் கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் லஞ்சப்பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம், கோவையில் பல இடங்களிலும் வீட்டு மனைகள், விவசாய நிலங்களை வாங்கி குவித்திருப்பது தெரிய வந்தது. இதெல்லாம் அவர் முறைகேடாக லஞ்சப் பணத்தில் இருந்து வாங்கியதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 26 தேர்வுநிலை பேரூராட்சிகளிலும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதில் பெருமளவு லஞ்ச வேட்டையாடி இருப்பதாக தகவல் வந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.