சேலத்தில் பாகனை காலால் மிதித்துக் கொன்ற ஆண்டாள் யானை, பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை காப்பகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மூடப்பட்ட உயிரியல் பூங்கா மீண்டும் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மதுரை அழகர் கோயிலில் இருந்த ஆண்டாள் யானை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. 'பேடி' (மனிதர்களில் திருநங்கை, திருநம்பி எப்படியோ அப்படியான வகை) வகையான இந்த யானை, அழகர் கோயிலில் இருந்தபோது மூன்று பேரை கொன்றுள்ளது. அதையடுத்தே அங்கிருந்து சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
சேலம் உயிரியல் பூங்காவில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்த பத்மினி என்பவரையும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 2ம் தேதி, கால்நடைத்துறை மருத்துவர் ஒருவர் ஆண்டாள் யானையை பரிசோதிப்பதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென்று மதம் பிடித்ததுபோல் நடந்து கொண்ட அந்த யானை, பாகன் காளியப்பன் என்பவரை காலால் மிதித்துக் கொன்றது. கால்நடை மருத்துவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த யானையை உயிரியல் பூங்காவில் வைத்து தொடர்ந்து பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பூங்காவும் மூடப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஆண்டாள் யானையை பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தது.
அதையடுத்து, ஆனைமலை காப்பகத்தில் இருந்து பத்து ஊழியர்கள் சேலத்திற்கு வந்திருந்தனர். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி முன்னிலையில், ஆனைமலை காப்பக ஊழியர்கள் ஆண்டாள் யானையை வியாழக்கிழமை இரவு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை தரப்பில் கேட்டபோது, ''ஆண்டாள் யானை, பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து டாப்சிலிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்குக் கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது,'' என்றனர்.
இதையடுத்து, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.