வீட்டில் உள்ள புதையலை எடுக்காவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி, பெண்ணிடம் பணத்தை பறித்து சென்ற போலி மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான முருகேசன் என்பவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 45). கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, இவருடைய வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் ஒரு மந்திரவாதி என்றும் உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது அதை எடுக்காவிட்டால் உங்கள் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மாந்திரீகம் செய்து புதையலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கேட்டுள்ளார். குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றதும் மிரண்டு போன பழனியம்மாள், வீட்டில் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்து மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர், ஓரிரு நாட்கள் கழித்து வந்து புதையலை எடுத்துத் தருவதாக கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால் சொன்னபடி அந்த மர்ம நபர் வரவில்லை.
அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனியம்மாள், இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இன்றைய மங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்பவர்தான் பழனியம்மாளை ஏமாற்றி பணம் பறித்தவர் என்பதும், அவர் மேலும் சிலரிடம் தன்னை மந்திரவாதி என்று கூறி ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கடந்த 19 ஆம் தேதி கைது செய்தனர்.