சேலம் வழியாக கேரளா சென்ற ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மூலமாக தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு கஞ்சா கடத்திச் செல்வது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. காவல்துறையினர் ஒருபுறம் கடத்தல் சரக்குகளை பறிமுதல் செய்வதும், குற்றவாளிகளை கைது செய்து வருவதும் நடந்து வந்தாலும், கஞ்சா கடத்தலை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் புதன்கிழமை (ஜூலை 6) அதிகாலை தன்பாத் - ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்நிலையத்தில் இருந்து ஏறிய காவல்துறையினர், முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்தப் பெட்டியில், கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பெரிய டிராவல் பை கிடந்தது. அந்தப் பையைச் திறந்து பார்த்தபோது, அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை, மர்ம நபர்கள் பொட்டலம் பொட்டலமாக பார்சல் டேப் மூலம் கட்டி வைத்திருந்தனர்.
இந்த கஞ்சா பையை அந்தப் பெட்டிக்குள் கொண்டு வந்தது யார் என்று தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, சேலம் ரயில்நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.