சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் பரவலாக கனமழை பெய்து வருவது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இரு நாள்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. என்றாலும், சேலத்தைப் பொருத்தவரை கடந்த மூன்று நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்தது.
ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை (செப். 22) சேலம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்துள்ளது. தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 62.4 மி.மீ., ஏற்காட்டில் 38 மி.மீ., ஆணைமடுவில் 31 மி.மீ., வீரகனூரில் 30 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் இன்று (செப். 23) இரவு 9.30 மணியளவில் திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது. பத்து நிமிடத்தில் மழையின் வேகம் குறைந்தது, எனினும் 10 மணி முதல் மீண்டும் மழை வேகமெடுத்தது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேகம் குறையாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாநகரில் முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் பெய்து வரும் கன மழையால் சேலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஆத்தூரில் இரவு 9 மணி முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கெங்கவல்லி, வீரகனூர், புத்திரகவுண்டன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு, இடைப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.