ஓமலூர் அருகே, தனியார் நூற்பு ஆலை தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவருடைய மனைவி தேவகி. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். வெங்கடேஷ், ஜலகண்டாபுரம் அருகே உள்ள காப்பரத்தான்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு, ஆலை நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வழக்கில் வெற்றி பெற்றார். அதையடுத்து மீண்டும் அதே ஸ்பின்னிங் மில்லில் பணியில் சேர்ந்து 9 மாதமாக பணியாற்றி வந்தார்.

நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்டதாலும், நீதிமன்றத்தில் ஆலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததாலும் அவருக்கு நாள்தோறும் ஆலை நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்துள்ளது. இதனால் வெங்கடேஷ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதுபற்றி தன் மனைவியிடம் அடிக்கடி கூறி புலம்பியுள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை (பிப். 26) அவர் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்றார். திடீரென்று அவர் இரவு 10.00 மணியளவில், ஆலை வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்ட விவரம் உடனடியாக யாருக்கும் தெரியவரவில்லை. வியாழக்கிழமை (பிப். 27) காலையில் பணிக்கு வந்த பணியாளர்கள், கிணற்றை பார்த்தபோது அதில் வெங்கடேஷின் சடலம் மிதந்ததை அடுத்துதான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சடலத்தை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த நிலையில், வெங்கடேஷின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆலை முன்பு திரண்டு வந்து, சடலத்தை எடுக்க விடாமல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஓமலூர் உள்கோட்ட டிஎஸ்பி பாஸ்கரன், ஓமலூர் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவல்துறையினர் ஆலை முன்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். பின்னர், சடலத்தை கிணற்றில் இருந்து மீட்டும், உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.