Skip to main content

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப்பதிவு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 80.92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27- ஆம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (திங்கள் கிழமை) தேர்தல் நடந்தது.

salem district poll out 81% local body election


மேற்சொன்ன எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 329985 ஆண் வாக்காளர்கள், 338850 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 668852 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 1173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 


எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 2005 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றில், மேற்சொன்ன நான்கு பதவிகளிலும் மொத்தம் 251 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இதையடுத்து, 1754 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. மொத்தம் 5923 வேட்பாளர்கள் இன்று (30.12.2019) தேர்தல் களத்தைச் சந்தித்தனர்.


காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 05.00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 05.00 மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்ததால், 05.00 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

salem district poll out 81% local body election


ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மதியம் 01.00 மணியளவில், 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருந்தது. சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்த மேற்சொன்ன எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 80.92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.


இத்தேர்தலில், மொத்த வாக்காளர்களில் 264076 ஆண்கள், 277148 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 541227 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது, ஆண்களைக் காட்டிலும் 11072 பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

salem district poll out 81% local body election



இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம்: 


ஆத்தூர் - 77.87%
அயோத்தியாப்பட்டணம் - 83.86%
கெங்கவல்லி - 74.06%
பெத்தநாயக்கன்பாளையம் & 80.04%
பனமரத்துப்பட்டி - 84.22%
சேலம் - 83.17%
தலைவாசல் - 78.53%
வாழப்பாடி - 84.14%


சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் முதல்கட்ட தேர்தலின்போது 81.68 சதவீத வாக்குப்பதிவும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 80.92 சதவீத வாக்குப்பதிவும் நடந்துள்ளது. ஆக மொத்தம், மாவட்டம் முழுவதுமாக இரண்டு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 81.3 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.


இம்மாவட்டத்தில் மிகக்குறைந்தபட்ச வாக்குகள், கொளத்தூர் ஒன்றியத்தில் பதிவாகி உள்ளது. அங்கு 73.06 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 87.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

salem district poll out 81% local body election


இரண்டாம் கட்டத் தேர்தலில் 9500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு பணிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தபின், வாக்குப்பெட்டிகளுக்கு அரக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதோடு, வெப் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


 

சார்ந்த செய்திகள்