
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு ஆண் டெய்லரை வைத்து வலுக்கட்டாயமாக சீருடைக்கு அளவெடுத்த சம்பவம் தொடர்பாக எஸ்எப்ஐ மாணவர் அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது.
மதுரை எம்.கே.புரம் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்கு அளவெடுக்க ஆண் டெய்லர்களை பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தின் பொழுது காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 15-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.