
நீலகிரி மாவட்டம் உதகை அருகே வனப்பகுதியில் பாதி தின்ற நிலையில் மனித உடல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பார்சன்ஸ்வேலி என்ற வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பழங்குடி இனத்தவரான தொடர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளே சென்ற ஒருவர் மீண்டும் திரும்பாததால் அந்தப் பகுதி மக்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியின் ஒரு பகுதியில் பாதி தின்ற நிலையில் உடல் கிடந்துள்ளது. ஏதேனும் ஆட்கொள்ளி மிருகம் தாக்கிக் கொன்று தின்று இருக்கலாம் என இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக புலி, சிறுத்தை, செந்நாய் ஆகியவற்றின் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபரை கொன்றது புலியா? சிறுத்தையா? அல்லது செந்நாயா என்பது தெரியாமல் இருக்கும் நிலையில் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு ஒருவித அச்ச உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீலகிரி கூடலூர் பகுதியில் 4 பேரை கொன்ற புலி ஒன்று மேன் ஈட்டர் (Man Eater) அதாவது மனிதர்களை கொன்று புசிக்கும் மிருகம் என அனுமானிக்கப்பட்டு டி23 என பெயரிடப்பட்டு பிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.