சேலம் அருகே நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளை, தீரத்துடன் காளையர்கள் அடக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் திங்கள்கிழமை (மே 30) ஜல்லிக்கட்டு விழா நடந்தது. நிலவாரப்பட்டியில் முதன்முதலாக ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெறப்பட்டது. அனுமதி கிடைத்த குறுகிய நாள்களிலேயே விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு விழாவை, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் மட்டுமின்றி நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகள் பங்கேற்றன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விழா தொடங்குவதற்கு முன்பே காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, காளைகளை அடக்க 300 கட்டிளங்காளையர்கள் களமிறங்கினர். விழா தொடங்குவதற்கு முன்பாக, காளைகள் துன்புறுத்தப்படக்கூடாது என்பது குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ உதயநிதி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட பச்சை நிற டி-ஷர்ட்டை அணிந்து வீரர்கள் களமிறங்கினர்.
அதன் பின்னர், வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்க முயன்றனர். பல காளைகள், காளையர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டின. சில காளைகள், ஒரே இடத்தில் நின்று கொண்டு ஆட்டம் காட்டியது. சில காளைகளை, வீரர்கள் திமிலை பிடித்து தீரமுடன் அடக்கினர்.
வீரர்களிடம் சிக்காமல் வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கும் பட்டு சேலைகள், அலைபேசி, மிக்ஸி, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனமும் கொண்டு வரப்பட்டு இருந்தது.
சேலம் எம்.பி., பார்த்திபன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் மிட்டல், சேலம் வருவாய்க் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி ஸ்ரீ அபிநவ் தலைமையில் கூடுதல் எஸ்.பி கென்னடி மற்றும் 3 டி.எஸ்.பிக்கள், 8 காவல் ஆய்வாளர்கள் உள்பட 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.