Skip to main content

மகளுக்கு கரோனா; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை! அதிகாரிகள் அலட்சியத்தால் நடந்ததா?

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

salem district nethimedu old women self quarantine incident police

 

சேலம் நெத்திமேடு பழனியப்பா காலனியைச் சேர்ந்தவர் சாந்தா (72). இவருக்கு 38 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வந்து தாயுடன் வசித்து வருகிறார்.

 

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சாந்தாவின் மகளுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடன் வசித்து வந்த சாந்தாவுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்று தெரிய வந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த சில நாள்களாக அவருடைய வீடும் பூட்டப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

உறவினர்கள் சிலர், நேற்று முன்தினம் (ஜூலை 12) இரவு முதல் சாந்தாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர் போனை எடுத்துப் பேசவில்லை. இதையடுத்து திங்களன்று (ஜூலை 13) காலையில் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். 

 

கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் அவர் வெளியே சென்றதாக பார்த்ததில்லை என்று அக்கம்பக்கத்தினர் பலரும் கூறியதை அடுத்து, சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மூதாட்டி தூக்கில் சடலமாகக் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து உடனடியாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ''மகளுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து, சாந்தாவுக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. அவருக்கு 'நெகட்டிவ்' என ரிசல்ட் வந்த பிறகும்கூட அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சொன்ன மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா, தற்கொலை செய்து கொண்டுள்ளார்,'' என்றனர்.

 

எனினும், மூதாட்டியின் தற்கொலை குறித்து காவல்துறை வேறு பல கோணங்களிலும் தீவிரமாக விசாரித்து வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும், அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நெத்திமேட்டிலும் மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்