சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (17/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,028 கனஅடியில் இருந்து 10,318 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.20 அடியாகவும், நீர் இருப்பு 63.80 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 9,000 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்துக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.