தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட பந்தநல்லூர் நகரத்தின் நடுவே அமைந்துள்ளது புகழ்மிக்க செட்டிக்குளம். எட்டு ஏக்கர் சுற்றளவு உள்ள இந்த குளம், நகரத்தின் பெருமையையும், நீர் ஆதாரத்தையும் காத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் குளம் வறண்டு கிடந்தது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பந்தநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினரும், வர்த்தக நிறுவனத்தினரும், நகரத்தின் கழிவுகள் குப்பைகள், ஐந்து திருமண மண்டபங்களின் கழிவுப்பொருட்கள், 11 இறைச்சி கடைகளின் கழிவுகள் என அனைத்தையும் கொண்டு வந்து குளத்தை சுற்றி கொட்டி நாசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் துரநாற்றம் வீசுவதோடு கொசு, ஈக்கள் அதிகமாகிவிட்டன.
இதைக்கண்டித்து இரண்டுமாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வளர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பந்தநல்லூரைச் சேர்ந்த முருகப்பன் தலைமையில் திரண்டுவந்து குளத்தின் கரையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. குப்பை கொட்டுவதை யாரும் நிறுத்தவில்லை.
இது குறித்து சமூக ஆர்வளர் த.முருகப்பன் கூறுகையில், " குப்பைக் கழிவுகள் அனைத்தும் செட்டிக்குளத்தைச் சுற்றி கொட்டப்படுகிறது. இது குறித்து நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அதை பொருட்படுத்தவே இல்லை. இதற்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களை திரட்டி வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என்று காட்டமாக தெரிவித்தார்.
பந்தநல்லூர் பகுதியில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.