சேலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை (ஜூன் 23) உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 347 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்குள் நுழைந்தவர்களில் மட்டும் 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 210 பேர் பூரண குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 136 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், சேலம் சன்னியாசிக்குண்டு பாத்திமா நகரை சேர்ந்த 61 வயதான மூதாட்டி ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சில நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு ஏற்கனவே இருதய நோயும் இருந்தது. அத்துடன் கரோனா வைரஸூம் தாக்கியதால் நிலைமை மோசமடைந்தது இதையடுத்து, ஐசியூ வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) மாலை உயிரிழந்தார். கடந்து பத்து நாள்களுக்கு முன்பு, தூய்மை காவலர் ஒருவரின் மனைவி ஒருவர் கரோனா தொற்றுக்கு முதன்முதலில் உயிரிழந்த நிலையில், தற்போது மூதாட்டியும் இறந்துள்ளார். இதன்மூலம் கரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ''கரோனா தொற்றினால் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை. அந்தளவுக்கு கரோனா வைரஸ், வலிமையான கிருமியும் கிடையாது. நோய் எதிர்ப்பு ஆற்றல் நல்ல நிலையில் உள்ளவர்கள் கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் ஒரே வாரத்தில் குணம் பெற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. ஏற்கனவே உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்போது, அது மேலும் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை சிதைத்து விடுகிறது. அதனால்தான் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்கின்றனர்,'' என்றார்.