சேலம் அருகே, காவல்துறையினரிடன் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், மன வேதனை அடைந்த விவசாயி குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் விவசாயி. இவருடைய மனைவி முத்துமாரி. இவர்களுடைய மகன் சிலம்பரசன். இவர்கள் மூவரும் திங்கள் கிழமை (மே 23) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்தனர்.
ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்த அவர்கள் திடீரென்று தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
காவல்துறையில் கிருஷ்ணன் கூறுகையில், ''எங்களுக்கு முக்கால் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை எங்கள் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளோம். அவர்தான் கடந்த இரண்டு ஆண்டாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது நாங்கள் நிலத்தை விற்க முடிவு செய்ததால், இதுகுறித்து பா.ம.க. பிரமுகரும் நிலத்தரகருமான சேகர் என்பவரிடம் கூறினோம். அவரை அணுகிய சக்திவேல், அவரிடம் 1.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
நாங்கள், 'நிலத்தின் குத்தகையை முடித்துக் கொள்ளலாம்; நிலத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்று சக்திவேலிடம் கூறினோம். அதற்கு அவர், நான் பா.ம.க. பிரமுகர் சேகரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கிவிட்டேன். நிலத்தைவிட்டு வெளியேற முடியாது என்றும் கூறினார். கொலைமிரட்டலும் விடுத்தார்.
மனவேதனை அடைந்த நாங்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஓமலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். எங்கள் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நிலம் பறிபோன வேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தோம். சக்திவேல், பா.ம.க. பிரமுகர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து தொடர் விசாரணைக்காக கிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சேலம் நகர காவல்நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தாமதம் ஆவதாலும், புகார்தாரரை அலைக்கழிப்பதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.