சேலத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் பணிகள் வீடு வீடாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ள நிலையில், 78 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி எல்லை என்பது 60 கோட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 2.34 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகர பகுதிகளில் கரோனா தொற்று நோய்ப் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகர பகுதிகளில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடு வீடாகச் சென்று குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை முழுமையாகக் கணக்கெடுக்கும் பணிகள் களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் விவரம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருவோர் விவரம், குடும்ப உறுப்பினர்களின் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாசக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று, இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 1.91 லட்சம் குடியிருப்புகளில் 7.63 லட்சம் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இப்பணிகளின்போது 2,330 நபர்கள் காய்ச்சல் அல்லது வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் என ஏதேனும் சில உடல் கோளாறுகளால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இப்பரிசோதனையில், 78 நபர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு, சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு பொதுமக்களைத் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை எவ்வித விடுதலுமின்றி சரியான முறையில் தெரிவித்து, கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.