Skip to main content

சேலம் பட்டாசு குடோன் வெடி விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

nn

 

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

சேலம் இரும்பாலை பகுதியில் இருக்கக்கூடிய சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. அந்த குடோனில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளும் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. முறையாக உரிமம் பெற்று இந்த பட்டாசு ஆலை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் இந்த குடோனில் வேலை செய்துவரும் நிலையில் இன்று மாலை 4:30 மணியளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், கடையில் பணியாற்றி வந்த நடேசன், மற்றும் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ், நடேசன் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்த ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்