சேலம் மாநகராட்சியில் நாளங்காடியை ஒப்பந்தம் எடுத்த குத்தகைதாரரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் குத்தகைத் தொகையை வசூலிக்காமல் விட்ட ஆர்.ஐ உள்ளிட்ட அதிகாரிகள் ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், செவ்வாய்ப்பேட்டையில் சேர்மன் ராமலிங்கம் நாளங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, பூ, பழங்கள், பலசரக்கு மளிகை உள்பட 250க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நாளங்காடியை கடந்த 2021ம் ஆண்டில், சேலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் குத்தகை எடுத்திருந்தார். ஒப்பந்தக் காலத்திற்கு உரிய குத்தகைத் தொகையை அவர் செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
அதிமுக பிரமுகரான அவரும் குத்தகைத் தொகை செலுத்தாமலேயே கடைக்காரர்களிடம் தண்டல் வசூலித்து வந்துள்ளார். சுதாகரிடம் இருந்து குத்தகை பாக்கியை வசூலிக்க வேண்டிய சூரமங்கலம் மண்டல உதவி வருவாய் அலுவலர், ஆர்.ஐ ஆகியோரும், கண்டும் காணாமலும் இருந்துவிட்டனர். இதனால், தற்போது மாநகராட்சிக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். ''முந்தைய அதிமுக ஆட்சியின் போது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகள், பொதுக்கழிப்பறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடங்களை ஏலத்தை எடுத்த ஒப்பந்ததாரர்கள் பலர், மாநகராட்சிக்கு குத்தகை பாக்கியை முழுவதுமாகச் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதில், அதிமுக பிரமுகரான இளங்கோவன் என்பவர் மட்டுமே 5 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளார். அவருக்கு தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியை ஒப்பந்தம் எடுத்திருந்த அதிமுக பிரமுகர் சுதாகர் என்பவரும் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் குத்தகை பாக்கி வைத்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் ஆர்.ஐ சண்முகம், அப்போது உதவி வருவாய் அலுவலராக (ஏ.ஆர்.ஓ) இருந்த பார்த்தசாரதி ஆகியோர் குத்தகை பாக்கியை வசூலிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஒப்பந்ததாரர்களுடன் 'மாமூல் கூட்டணி' வைத்துக்கொண்டு, குத்தகை பாக்கியை வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.
ஒருகட்டத்தில் நெருக்கடி அதிகமானதால், ஒப்பந்ததாரர் சுதாகர், சேலம் மாநகராட்சிக்கு 000259 என்ற எண்ணிட்ட காசோலையில் 10 லட்சமும், 000258 என்ற எண்ணிட்ட காசோலையில் 30 லட்சம் ரூபாயும் நிரப்பி, 24.9.2021 தேதியிட்டு வழங்கினார். அந்த இரண்டு காசோலைகளும் வங்கியில் பணமில்லாமல் திரும்பிவிட்டது. பொதுவாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை, வசூல் ஆகாத இனங்களில் காட்டப்பட வேண்டும். அதுவும் காட்டப்படாமல் உள்நோக்குடன் மறைக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஐ., சண்முகம், நடப்பு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். சுதாகர் மீது நடவடிக்கை எடுக்காத ஆர்.ஐ., சண்முகம் மற்றும் அப்போது ஏ.ஆர்.ஓ ஆகவும், தற்போது மைய அலுவலகத்தில் நிர்வாக அலுவலராகவும் உள்ள பார்த்தசாரதி ஆகியோரை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். சூரமங்கலம் மட்டுமின்றி அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் குத்தகை தொகை வர வேண்டியுள்ளது. இவற்றை முறையாக வசூலிக்காமல் குத்தகைதாரர்களிடம் மாமூல் கூட்டணியில் உள்ள ஆர்.ஐ, ஏ.ஆர்.ஓக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறையால் இன்னும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள குத்தகை பாக்கியை வசூலித்தால் நிதி பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம்” என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
இது குறித்து, சேலம் மாநகராட்சி மைய அலுவலக நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ''சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியை சுதாகர்தான் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவர் ஏலம் எடுத்த கால கட்டத்தில் நான் அங்கு பணியில் இல்லை. அம்மாபேட்டை மண்டலத்திற்கு என்னை இடமாற்றம் செய்துவிட்டனர். டிரான்ஸ்பர் செய்துவிட்டதால் அங்கு நான் உரிமை கொண்டாட முடியாதுல்ல.. எனக்கு அடுத்து வந்தவர்கள்தான் குத்தகை பாக்கியை வசூலிக்க வேண்டும்,'' என்றார்.
இவர் இப்படிச் சொல்ல, சூரமங்கலம் மண்டல ஆர்.ஐ சண்முகத்திடம் கேட்டதற்கு, ''சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியில் எத்தனை கடை உள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. ஒப்பந்ததாரர் சுதாகர், குத்தகை பாக்கி செலுத்தாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்திட்டு இருக்கு. அப்புறம் பேசுகிறேன்... ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்'' என்றார்.
ஆனால், ஆர்.ஐ சண்முகம் மீண்டும் நம்மிடம் பேசவில்லை. எந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தீர்கள் என்று கேட்டதற்குக் கூட, சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக மழுப்பலானச் சொன்னார்.
பார்த்தசாரதிக்கு பிறகு சூரமங்கலம் மண்டலத்தில் ஏ.ஆர்.ஓ ஆக சேர்ந்த செந்தில்முரளியிடம் கேட்டபோது, ''ஏலம் எடுத்த சுதாகர் வழங்கிய காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டன. அவர் மீது நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம். பார்த்தசாரதி தனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்வது நல்ல பதில் ஆகாது. நான் சூரமங்கலத்தில் ஏ.ஆர்.ஓ ஆக செல்வதற்கு முன்பே ஒருமுறை சுதாகர் காசோலைகள் வழங்கி, அவையும் பவுன்ஸ் ஆகியிருந்தது தெரியவந்தது'' என்றார்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏலம் எடுக்கும்போதே, ஒப்பந்ததாரர்கள் அதற்குரிய முழு குத்தகைத் தொகையையும் செலுத்த வேண்டும். சேர்மன் ராமலிங்கம் நாளங்காடி ஒப்பந்ததாரரிடம் அவ்வாறு ஆரம்பத்திலேயே குத்தகை தொகையை வசூலிக்காமல் விட்ட ஏ.ஆர்.ஓ மீதும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
ஆர்ஐ சண்முகமும், தன் பணிக்காலத்தில் குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் அலட்சியமாக இருந்தாரா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் ஓய்வுக்கால பலன்கள் நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது'' என்றார்.