சேலம் மாநகர பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே கறிக்கடைகள் இயங்கலாம் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் புதிதாக உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சில நிபந்தனைகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஊரடங்கினால் அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை ருசிக்க முடியாமல் தவித்து வந்தனர்.
கடந்த மார்ச் 31ம் தேதி இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டதால், அசைவப் பிரியர்கள் கசாப்புக்கடைகள் முன்பு குவிந்தனர். ஆடு, கோழி, மீன், முட்டை என ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஊரடங்கினால் சரக்குப் போக்குவரத்தும் முடங்கியதால் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் வரத்தும் குறைந்து இருந்தது.
இதனால் ஆட்டுக்கறி கிலோவுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்து ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. பிராய்லர் கோழிக்கறியும் கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்தது.
மேலும், கசாப்புக்கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதிகளையும் மறந்து, முண்டியடித்தனர். முகக்கவசமும் அணியாமல் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் இறைச்சிக்கடைகள் முன்பு கூடிய கூட்டத்தைக் கண்டு அனைத்து மாவட்ட நிர்வாகமும் செய்வதறியாது திணறிப்போனது. இந்நிலையில்தான், சேலம் மாநகர பகுதிகளில் இறைச்சிக்கடைகள் இயங்க முதன்முதலில் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
மேலும், சனி, ஞாயிறுகளில் மட்டும் செயல்படும் வகையில் சேலம் கருப்பூர் அரபிக்கல்லூரி அருகே இறைச்சிக்கென புதிய சந்தையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருந்தாலும்கூட, அசைவப்பிரியர்கள் சிரமம் கருதாமல் கருப்பூருக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த இறைச்சியை வாங்கி வந்தனர்.
அங்கே சமூக விலகல் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் மற்றும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே இறைச்சி வாங்க அனுமதிக்கப்பட்டனர். என்றாலும், ஒட்டுமொத்த சேலம் மக்களுக்கும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இறைச்சி சந்தை என்பதால் அங்கும் கூட்டம் கூடுவதை அதிகாரிகளால் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ், இனி மாநகர பகுதிகளில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வகை கறிக்கடைகளும் செயல்படலாம் என சனிக்கிழமை (ஏப். 11) திடீரென்று அறிவித்துள்ளார். அதேநேரம், மாநகர பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும்வரை இறைச்சிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளார். இந்த புதிய உத்தரவு கருப்பூர் அரபிக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட இறைச்சி சந்தைக்கும் பொருந்தும்.
கிறித்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, நாற்பது நாள் தவக்காலம் முடிந்து அவர்கள் அசைவத்திற்கு மாறுவார்கள். இந்நிலையில், சனி, ஞாயிறுகளில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கிறித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம், அசைவ பிரியர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அந்த நாளில் கடை திறக்காமல் தடை விதிக்கப்படுவதற்கும் கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.