படம் மாடலே... இடம் : சென்னை எருக்கஞ்சேரி
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தங்களுக்கு சொந்தமான அனைத்து ஏடிஎம் மையங்களிலும் உடனடியாக காவலர்களை நியமிக்க வேண்டும். காவலர்கள் இல்லாத மையங்களை உடனடியாக மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உத்தரவின்பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள், இயந்திர தெளிப்பான்கள், கைத்தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 5 வேளை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல்நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், வங்கிகள், தீயணைப்பு நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல்துறை ஆணையர் மற்றும் எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசு அலுவலக கட்டடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்கக்கூடிய இடங்களைத் தவிர, வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். இதன் மூலமாகவும் மக்களுக்கு கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகர பகுதிகளில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களுக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் காவலர்களைக் கொண்டு தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்திட வேண்டும். அப்போதுதான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும். அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏடிஎம் மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு கிருமி நாசினி மருந்து வழங்கி கைகளை சுத்தப்படுத்திய பிறகே, ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
காவலர்கள் இல்லாத மையங்கள் மூலம் தொற்று நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக அனைத்து ஏடிஎம் மைங்களுக்கும் காவலர்களை நியமித்து, தொற்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவலர்கள் நியமிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை மூட வேண்டும்.
அனைத்து வங்கிகளின் ஏடிஎம் மையங்களும், காவலர்கள் பாதுகாப்புடன் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்களின் திடீர் தணிக்கையின்போது காவலர்கள் இல்லாமல் இயங்கும் ஏடிஎம் மையங்கள் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின் படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சேலம் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.