சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து விடும் என்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மார்ச் 7ம் தேதி மர்ம நபர் ஒருவர் தகவல் அளித்தார்.
இதையடுத்து சென்னை காவல்துறையினர் சேலம் மாநகர காவல்துறையை உஷார்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. தொலைபேசியில் வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது.
காவல்துறையையும், பொதுமக்களையும் அலைக்கழித்த மர்ம நபர் யார் என்பதை கண்டறியும் பணியில் காவல்துறையினர் இறங்கினர். தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசியிருந்தார். அந்த நபர் ரஹ்மான் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் குண்டு வைத்ததாக பேசியதைக் கேட்டேன் என்றும் தொலைபேசி உரையாடலின்போதும் கூறியிருந்தார். அதை வைத்தும், எந்த டவர் சிக்னலில் இருந்து பேசப்பட்டது என்பது குறித்தும் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் மர்ம நபரைக் கண்டுபிடித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
சேலம் எழில் நகரைச் சேர்ந்த ரஹ்மான் என்பவர் மணிவண்ணனிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் ஏற்பட்ட விரக்தியில் ரஹ்மானையும் அவருடைய நண்பர்களையும் சிக்க வைப்பதற்காக, அவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரஹ்மான் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.