மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து அரசு வாகன ஓட்டுநர்கள் சூதாடிய சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றதால் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளின் பயன்பாட்டுக்காகவும் அலுவலகப் பயன்பாட்டுக்காகவும் பணியாற்றும் அரசு வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து வருவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பழுதான வாகனத்தில் மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன.
காவல்துறைக்கு இது குறித்து புகார் வந்ததைத் தொடர்ந்து, அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க காவல்துறையினர் அங்குச் சென்றனர். அப்போது அங்கு சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்த அரசு ஓட்டுநர்கள் சீட்டுக்கட்டை போட்டுவிட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரைப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, ஓய்வு நேரங்களில் இது போன்று விளையாடுகிறோம் என அவர் தெரிவித்து தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்தும் வகையில் பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த வாகன ஓட்டுநர்களை காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பழுதடைந்த அரசு வாகனத்தில் அரசு வாகன ஓட்டுநர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.