எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனுக்களோடு வந்த விவசாயிகளை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதால், விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் & சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக செயல்படுத்தப்படுகிறது. எட்டுவழிச்சாலைக்காக ஏராளமான விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் சொந்த மண்ணின் விவசாயிகளே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் அரசுப்பொருட்காட்சியைத் தொடக்கி வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை (ஆகஸ்ட் 4) சேலம் புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி மைதானத்திற்கு வந்தார். இதையறிந்த எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், முதல்வரை நேரில் சந்தித்து இத்திட்டத்தைக் கைவிடக்கோரி மனுக்களை அளிக்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து குள்ளம்பட்டி, பூலாவரி, கூம்மாங்காடு, புஞ்சைக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனுக்களுடன் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் விவசாயிகள் ஒன்றுதிரண்டு வருவதை அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், முதல்வரைச் சந்திக்க விடாமல் விவசாயிகளை சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் முதல்வரை எப்படியும் சந்தித்தே தீருவோம் என விவசாயிகள் ஒரே குரலாகச் சொன்னதால், அங்கே பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
பொருட்காட்சியைத் திறந்து வைக்க விழா அரங்கிற்குள் முதல்வர் நுழைவதைப் பார்த்த விவசாயிகள் அவரை நோக்கி முன்னேறினர். ஆனாலும் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வரை கண்டித்தும், எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராகன வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் விழா மேடையில் பேசத் தொடங்கியதால், விவசாயிகள் பொருட்காட்சி மைதானத்திற்கு வெளியே தார் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரை சந்திப்பதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் அவரை சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. விழா முடிந்து முதல்வர் வீடு திரும்பினார். இதனால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ''கடந்த மாதம் சேலம் வந்திருந்த முதல்வரை சந்தித்த சில விவசாயிகள், எட்டுவழிச்சாலைக்கு நிலம் கொடுக்க சம்மதிப்பதாகக்கூறி மனு கொடுத்தனர். அவ்வாறு மனு கொடுத்த அனைவருமே அதிமுகவினரால் திட்டமிட்டு அழைத்து வரப்பட்டவர்கள். நிலம் கொடுக்க சம்மதம் என்பவர்களை மட்டும் சந்திக்கும் முதல்வர், இத்திட்டத்திற்காக எங்கள் மண்ணை விட்டுத்தர மாட்டோம் எனக்கூறும் எங்களை மட்டும் சந்திக்க மறுப்பது ஏன் என்று புரியவில்லை.
பொது இடத்தில் மனு கொடுக்க வேண்டாம் என்றும் முதல்வரை அவருடைய வீட்டில் வந்து சந்தித்து மனு கொடுக்கும்படி சொன்னதாக காவல்துறையினர் கூறுகின்றனர். முதல்வர் இந்த இடத்தில் இருக்கும் போதே அந்த பதிலைச் சொல்லி இருக்கலாம். அவர் வீட்டுக்குப் போன பிறகு இப்படி ஒரு பதிலைச் சொல்கின்றனர். நாங்கள் அவருடைய வீட்டுக்குச் செல்ல தயாராக இல்லை. ஓட்டு கேட்க மட்டும் வீடு வீடாக வந்த முதல்வர் எங்களை இந்த இடத்தில் சந்திக்க மாட்டாரா? அவர் வைத்ததுதான் சட்டமா? பத்திரிகைகளில் இந்தந்த சர்வே நம்பர் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிக்கை மட்டும் விடுகின்றனர். நாங்கள்தான் குழந்தைகளை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதற்குமுன் கலெக்டரை பார்க்க போனோம். அவரும் சந்திக்க மறுத்துவிட்டார். இப்போது முதல்வரும் சந்திக்க மறுக்கிறார். எங்களை சந்திக்க அனுமதிக்க மறுக்கும் இவர்கள் எங்கள் நிலத்தை மட்டும் எப்படி எடுப்பார்கள்? நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு செத்தாலும் சாவோமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். இத்திட்டத்தை பெரும்பான்மையான விவசாயிகள் கொஞ்சமும் விரும்பாதபோது, எட்டுவழிச்சாலைக்கு பலரும் ஆதரவு தெரிவிப்பதாக முதல்வர் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அது கண்டிக்கத்தக்கது. இத்திட்டம் குறித்து இதுவரை நேரடியாக முதல்வர் விவசாயிகளை அழைத்துப் பேசாததால், நாங்களே அவரைச் சந்திக்க வந்தோம். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொது இடத்தில் வைத்து விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற வேண்டும்,'' என்றனர்.
விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். எனினும், எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறிவிட்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.