Skip to main content

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எட்டுவழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்! சேலத்தில் நிதின் கட்கரி உறுதி!! 

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 


சேலம் மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டபிறகு சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

 

k


மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14, 2019) பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. நடுவண் தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:


தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை நாங்கள் அறிவோம். தமிழகம் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக நதிகளை இணைப்பது அவசியமாகிறது. தற்போது கோதாவரி நதியில் இருந்து ஆண்டுக்கு 1100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் கொண்டு வர ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


கோதாவரியில் இருந¢து கால்வாய்கள் மூலமாக தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வராமல் குழாய்கள் மூலமாக கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது தமிழ்நாடு முழுமையாக நீர்ப்பாசன வசதி பெறும். இத்திட்டத்தால் தமிழகத்தின் பெரும்பகுதி பயன் அடையும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும். 


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்யுங்கள். அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்போம். என்னளவில் இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் என்று கூட சொல்வேன். 


காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் பெற்றுத்தரப்படும். முதல்கட்டமாக 26.6.2018ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 


சேலம் மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, உலகத்தரமான பஸ்போர்ட் ஆகிய திட்டங்கள் இந்த நகரம் வளர முக்கிய காரணம். சேலம், கோவையில் 8 மேம்பாலங்களுக்கு நடுவண் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் நீளத்தை 6066 கி.மீ. தூரத்தில் இருந்து 7400 கி.மீ. தூரமாக அதிகரித்து இருக்கிறோம். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சாலைத்திட்டங்கள், உள்கட்டமைப்புக்காக 7.50 லட்சம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும். 


சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நானும் விவசாயம் நிறைந்த பகுதியில் இருந்து வந்தவன் என்பதால், இத்திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பாக விவசாயிகளிடம் முழுமையாக கருத்துகள் கேட்ட பிறகு, இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இத்திட்டம் அவசியம்.


கடந்த காலங்களில் விதர்பாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதுபோன்ற தற்கொலைகளை தடுக்கத்தான் தேஜகூ  அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பாடுபட்டு வருகிறது. விளை பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக தயாரித்து சந்தைப்படுத்தும்  திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நீங்கள் எல்லோரும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 


இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்