பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் உள்ள அத்தனை வாக்குச்சாவடிகளிலும் எங்களது பலத்தை காண்பிக்கும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இந்த மாதம் 18, 19 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த அளவுக்கு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இருக்கும். 18ஆம் தேதி காலையிலேயே மாநிலத் தலைவர்களுக்கான கூட்டம் இருக்கிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வழிக்காட்ட இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மரியதைக்குரிய முன்னாள் முதல் அமைச்சர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நேரத்தில், இன்று தமிழக அரசியல் ஒரு சமதளத்தில் இருக்கிறது. இந்த சமதள அரசியலில் உண்மையாகவே மக்களுக்காக போராடும் தலைவர்கள், உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்கள், அவர்கள் நிலைக்கு உயர முடியுமே தவிர, திடீரென்று யாரோ ஒருவர் வந்து அந்த இடத்தை நிரப்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை.
பாஜகவை பொருத்தமட்டில் இந்த இரண்டு தலைவர்களிடம் உள்ள நல்ல தன்மைகளை எடுத்துக்கொண்டு, எங்களது கொள்கையில் பிடிப்போடு இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த தேசியத்தின் தாக்கம் நிச்சயம் தமிழகத்தில் இருக்கும். தனிப்பெரும் ஆதிக்கமாக திராவிட கட்சிகள் இருந்தது. இனிமேல் வரும் காலத்தில் தேசிய கட்சிகளின் பங்கு நிச்சயமாக இருக்கும். குறிப்பாக பாஜகவின் பங்கு இருக்கும் என்றார்.