தமிழக சட்டப்பேரவை இன்று (02.01.2019) காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
3ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயன் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து இரங்கல் தெரிவிக்கப்படும்.
அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மற்றும் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் ஆகியோர் மறைவு குறித்து துணை முதல் அமைச்சர் மற்றும் பேரவை முன்னவர் ஆகியோர் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிவார்கள். இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைக்கப்படும்.
இதையடுத்து ஜனவரி 4, 5, 7 ஆகிய 3 நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். 8ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் பதில் அளிக்கிறார். இவ்வாறு அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கப்பட்டது.