சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் தனது ஆசன வாயில் அலைப்பேசி சாதனத்தை பதுக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் அலைப்பேசி சாதனம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள், புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. என்றாலும், சிறைக்காவலர்கள், பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லும் காவலர்கள் அல்லது அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் மூலமாகத் தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளுக்கு கைமாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. திடீர் சோதனைகள் மூலமாக இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் மத்திய சிறை கைதி ஒருவரிடம் மே 24 ஆம் தேதி, ஒரு அலைப்பேசி சாதனம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மத்திய சிறையில் குமரகுரு என்ற விசாரணைக் கைதி அடைக்கப்பட்டுள்ளார். மே 24 ஆம் தேதி காலை 6 மணியளவில், அந்த கைதி ஒரு மாதிரியாக நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய நடையில் சந்தேகம் அடைந்த சிறைக் காவலர்கள், அவரை குண்டு கட்டாக ஜெயிலர் அறைக்குத் தூக்கிச் சென்று முழுமையாக சோதனை செய்தனர். அந்தக் கைதியின் ஆசன வாயில் அலைப்பேசியை சொருகி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறைக் காவலர்கள், ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த ஜெயிலர் முன்னிலையில், கைதியின் ஆசன வாயில் இருந்து அலைப்பேசி சாதனத்தை எடுக்க முயற்சித்தனர். அதில் ஏதும் பலன் கிடைக்காததால் கழிப்பறைக்கு தூக்கிச் சென்று குமரகுருவை முக்கச் செய்தனர். ஏறக்குறைய முக்கால் மணி நேர முயற்சிக்குப் பிறகு குமரகுருவின் ஆசன வாயில் இருந்து அலைப்பேசி சாதனம் வெளியே எடுக்கப்பட்டது. 3 அங்குல நீளம், 1.5 அங்குல அகலமும் உள்ள சிறிய ரக சீனா தயாரிப்பான பழைய பொத்தான் மாடல் அலைப்பேசி சாதனத்தை ஒரு பாலிதீன் பையில் சுற்றி உள்ளே சொருகி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், மதுரையைச் சேர்ந்த கொலை வழக்கு கைதி ஒருவர் இந்த அலைப்பேசி சாதனத்தை தன்னிடம் கொடுத்ததாகவும், அதை திருப்பிக் கேட்கும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியதாகவும் கூறியுள்ளார்.
அதனால் கடந்த இரு நாள்களாக தனது ஆசன வாயை அலைப்பேசி வைக்கும் பாதுகாப்பு பெட்டகமாகப் பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குமரகுருவிடம் அலைப்பேசி கொடுத்த கைதியிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைக் காவலர்கள் கூறுகையில், ''சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கைதியை ஒரு மாதம் தனி அறையில் அடைக்கப்படுவது வழக்கம். அவருக்கு உறவினர்களைச் சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்படும்'' என்றனர். இதையடுத்து குமரகுருவை சிறைக் காவலர்கள் தனி அறையில் அடைத்தனர்.