சேலத்தில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனினும், ஓட்டுநரின் சமயோசித நடவடிக்கையால் 60 பயணிகள் உயிர்ச்சேதமின்றி தப்பினர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சேலம் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60 பயணிகள் இருந்தனர். கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார்.
![salem bypass bus incident passengers , police](http://image.nakkheeran.in/cdn/farfuture/S-Yr4wLJ27JAfqMJuukmRz4qXzVCP19hysZFmKUU_WE/1582078319/sites/default/files/inline-images/bus3_0.jpg)
கந்தம்பட்டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காலை 9.15 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று, பேருந்தின் முன்பக்கத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று 'குபுகுபு' வென்று கரும்புகை கிளம்பியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், உடனடியாக அவசர அவசரமாக சாலையின் நடுவிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி புகை வந்த இடத்தைப் பார்த்தார். பதற்றம் அடைந்த பயணிகளும் 'திபுதிபு' வென்று கீழே இறங்கினர்.
பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்த சாலையோரக் கடைக்காரர்கள் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சிலர் மணலைக் கொண்டு வந்து கொட்டினர். ஆனாலும் தீ மேலும் கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் மீது இருந்து பேருந்து மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ முற்றிலும் அணைந்தது. என்றாலும், பேருந்துக்குள் அனைத்து இருக்கைகளும் தீயில் நாசமாயின.
ஓட்டுநர் கார்த்திக் சமயோசிதமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், பேருந்தும் முழுவதும் தீயில் நாசமாகாமலும் காப்பாற்றப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் கந்தம்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.