சேலத்தில், மல்டிவெவல் மார்க்கெட்டிங் துறையில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றுகூறி பெண்ணிடம் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில், பாஜக பிரமுகரை இரண்டாவது முறையாக கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம் எல்ஐசி காலனியில் ஜஸ்ட்வின் என்ற பெயரில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தவர், பாலசுப்ரமணியம். பாஜக பிரமுகர். இவர் ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் ஒரே வருடத்தில் இரட்டிப்பாக பெறலாம் என விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, ஏராளமானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் பாலசுப்ரமணியம் உறுதி அளித்தபடி இரட்டிப்பு லாபம் தராமல் மோசடி செய்தார்.
இதையடுத்து ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பாலசுப்ரமணியம், அவருடைய மகன் உட்பட 5 பேரை கைது செய்தனர். இவர் மீது 200க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். ஜஸ்ட்வின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 5 ஆயிரம் பேரை புகார் கொடுக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே, பாலசுப்ரமணியம் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இது ஒருபுறம் இருக்க, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.என்.பட்டியைச் சேர்ந்த சிந்து ஈஸ்வரி (32) என்பவர் அழகப்பாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''நான் 7.11 லட்சம் ரூபாயை ஜஸ்ட்வின் நிறுவனத்தில் செலுத்தினேன். ஆனால் அதற்கான லாபம் எதுவும் கொடுக்கவில்லை. மாதத் தவணையும் தரவில்லை. இது தொடர்பாக அடிக்கடி நான் கேட்டு வந்தபோது, காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன. இதனால் பாலசுப்ரமணியத்தை நேரில் சென்று கேட்டேன். அப்போது அவர் என்னை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலசுப்ரமணியத்தை செப்.8 ஆம் தேதி கைது செய்தனர்.