
சேலம் ரவுடி கொலையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூளையாக செயல்பட்ட மற்றொரு ரவுடி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி வனப்பகுதியில் ஒருவாரத்திற்கு முன்பு, ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சடலத்தை வீசிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது.
சடலத்தைக் கைப்பற்றிய ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், கொலையுண்ட நபர், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாஷா என்கிற பாதுஷா மைதீன் என்பதும், கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்பதும் தெரியவந்தது.
கொல்லப்பட்டவர் யார் என்று தெரிந்த பிறகு வழக்கு விசாரணை வேகமெடுத்தது. பாதுஷா மைதீனின் செல்ஃபோன் எண்களை வைத்து விசாரித்ததன் பேரில் குறிப்பிட்ட நான்கு பேர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அதன்படி, கிச்சிப்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த சக்தி என்கிற சக்திபிரபு (31), சிவதாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (22), மணிகண்டன் (22), வசந்தகுமார் (20) ஆகிய நான்கு பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள்தான் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலைக்கான பின்னணி தகவல்களும் தெரியவந்தது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பூசாரிப்பட்டி பகுதியில் நடந்த ஒரு நகைக் கொள்ளை சம்பவத்தில் மற்றொரு ரவுடி மணிகண்டன் என்பவரும், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சிறையில் வேறொரு அடிதடி வழக்கில் பாதுஷா மைதீனும் அடைக்கப்பட்டிருந்தார்.
சேலம் மத்திய சிறையில் மணிகண்டனுக்கும், பாதுஷாவுக்கும் தகராறு ஏற்பட்டு, அங்கேயே கைகலப்பு வரை சென்றுள்ளது. சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிறகும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது காவல்துறை வசம் பிடிபட்டுள்ள நான்கு பேர் மற்றும் கார்த்திக் ஆகிய ஐந்து பேர் உதவியுடன் பாதுஷா மைதீனை திட்டமிட்டு ஓரிடத்திற்கு வரவழைத்து ரவுடி மணிகண்டன் தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
கைதான நான்கு பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட மணிகண்டன், அவருடைய நண்பன் கார்த்திக் ஆகியோரை தேடிவருகின்றனர்.