கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் சென்னை அடுத்துள்ள பொத்தேரி பகுதியில் மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் காலை நேரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு பலரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாகவும், கஞ்சாவையும் ஒருவர் விற்று வருவதாக இருவரும் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விஜய் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் சுமார் 300 வலி நிவாரண மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, 36,000 பணம், 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் விஜய் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், விபத்து காரணமாக கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு போதை பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது. அவர் மட்டுமல்லாது அவருடைய காதலி ஜாஸ்மினுக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரிய வர, அவரையும் போலீசார் கைது இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.