ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் ஆனைமல்லூர், கருங்காலிகுப்பம், மோகனாவரம், நம்பரை. இந்த பகுதிகளில் பாக்கெட்டுகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலை 6:00 மணிக்கே விற்பனை துவங்கிவிடுவதால் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு பாக்கெட்டை வயதில் மூத்த ஆண்களே அதிகளவில் வாங்குகின்றனர் என்றும், மதுவைக் குடித்துவிட்டு பாக்கெட்டுகளை விளைநிலங்களில் வீசிவிட்டுச் செல்வதால் விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாலையிலேயே விற்பனை தொடங்குவதால் வேலைக்குச் செல்ல ஆயத்தமாவோர் கூட மதுவைக் குடித்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலையை விட இங்கு விலை குறைவாக இருப்பதால் இளம் தலைமுறையினர் கூட இந்த பாக்கெட் சாராயத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சும் போது பேட்டரிக் மருந்து அதிக அளவில் கலப்பதால் கண்பார்வை இழப்பு, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். சாராய விற்பனை செய்பவர்கள் குறித்து திமிரி காவல் நிலையத்திற்கு சமூக ஆர்வலர்கள் ரகசியமாகத் தகவல் தெரிவித்தால் கூட, தகவல் தெரிவித்தவர் குறித்த விபரங்களான பெயர், செல்போன் எண் போன்றவை சாராயம் காய்ச்சுவோருக்கு தெரிந்துவிடுகிறது என்றும் அப்பகுதி மக்கள் இது குறித்து தகவல் கொடுக்க அஞ்சுகிறார்கள்.
இவ்வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.