சேலம் சரகத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி கொள்¢ளையர்கள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளின் சமூக விரோத செயல்களை அடக்கி வைக்கும் வகையில் அவர்கள் மீது போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்பெல்லாம் மூன்று குற்ற வழக்குகளிலாவது தொடர்பு உடைய குற்றவாளிகள் மீது மட்டுமே தடுப்புக்காவல் சட்டம் எனப்படும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாயும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் ஒருமுறை கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலே அவர்களை குண்டாஸில் கைது செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதனால், அண்மைக் காலமாக சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் பிரத்யேக ஆர்வம் காட்டுகின்றனர்.சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட காவல்துறையினர் நடப்பு ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 168 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்ட போலீசார் 30 பேரையும், சேலம் மாநகர போலீசார் 69 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 பேர், தர்மபுரி மாவட்டத்தில் 3 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 22 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.போலீசாரின் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான குண்டாஸ் கைதிகள் அட்வைசரி போர்டு மூலம் தங்கள் மீதான குண்டாஸ் நடவடிக்கையை முறியடித்து விடுகின்றனர். அந்தளவுக்கு போலீசாரின் குண்டாஸ் குறித்த கைது ஆவணங்களில் ஓட்டைகள் உள்ளதையும் மறுக்க முடியாது.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''குண்டாஸ் மூலம் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்டிப்பாக ஓராண்டுக்கு முடக்கி வைக்க முடியும். ஆனால், அண்மைக்காலமாக நாங்கள் குண்டாஸில் கைது ஆனவர்கள் அட்வைசரி போர்டு மூலமாக விடுதலை ஆகிவிடுவதையும் மறுக்க முடியாது. என்றாலும், அட்வைசரி போர்டில் ஆஜர்படுத்தும் வரையிலாவது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் நடவடிக்கைகளை சில மாதங்கள் வரை முடக்கி வைக்கிறோம் என்பதே ஆரோக்யமான நடவடிக்கைதான்,'' என்றார்.