ஈரோட்டில் உள்ள பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படுகிற 'சக்திதேவி' என்ற அறக்கட்டளை மூலம் வருடம் தோறும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நான்கு வருட படிப்பிற்கான கல்வி கட்டணம் முழுவதும் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது நடப்பு கல்வி ஆண்டு முதல், முதலாமாண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்புக்கான கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் என். வெங்கடேச பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார். பதிவாளர் டாக்டர் ஆர். தமிழ்வேந்தன் வாழ்த்துரையும், துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி சிறப்புரையும் ஆற்றினார்கள்.
சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி.சி. துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, முதலாமாண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான கல்வி கட்டணம் ரூபாய் 4 லட்சத்து, 69 ஆயிரத்து 500 க்கான வரைவோலையை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் உதவித்தொகை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.ஜி. கவிதா நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைகழக அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.