நாகப்பட்டினத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கான சாலைக்கு தனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி நிதி ஒதுக்கீடு செய்து, அதை நிறைவேற்றிக் கொடுத்தார். அதை முன்னிட்டு இன்று (18.10.2018) அக்கோயிலில் நடைப்பெற்ற விழாவுக்கு வருகை தந்து மருத்துவ முகாமை, தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.
அவரை கோயில் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து வரவேற்று, நன்றி பாராட்டினர்.
பிறகு அங்கு இரண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார். பிறகு வழக்கறிஞர் தங்க. கதிரவன் மற்றும் நாகை நகராட்சி ஆணையர் ஆகியோர் அனைவருக்கும் மங்கள பைகளையும் வழங்கினர்.
அந்த விழாவின் தொடக்கமாக, கோயில் தலைவர் மெய்யடிமை அவர்கள் நல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து சூராவை ஒதி, பிறகு உபநிடங்களை கூறி அனைவரையும் கவர்ந்தார்.
அங்கு பேசிய மு.தமிமுன் அன்சாரி, மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை கண்டித்து, எல்லா மதங்களும் அன்பையும், அறத்தையும், மனிதாபிமானத்தையும் தான் போதிக்கின்றன என்றார். நமது பிள்ளைகளை அத்தகைய பண்புள்ளவர்களாக உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பிறகு கோயில் நிர்வாகத்தினர், இப்பகுதியில் பக்தர்கள் வந்து செல்ல, சாலை அமைத்து கொடுத்ததற்கு தமிமுன் அன்சாரிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.