கரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோவை திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் இணைந்து கடந்த வாரம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 'கோவை ட்ரான்ஸ்' கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் முதன்முறையாக, முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த உணவகத்தை நிர்வகிக்கும் திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் முயற்சியைப் பாராட்டி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், "கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 திருநங்கைகள் இணைந்து கோவை ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ள செய்தியறிந்து மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த சீரிய முயற்சி வெற்றி பெற்று வாழ்வில் மென்மேலும் சிறக்க திருநங்கைகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்த பாராட்டை தொடர்ந்து, கோவை ட்ரான்ஸ் கிச்சன் உணவகத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழக பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசனும் தமது கட்சி நிர்வாகிகளுடன் சென்று இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்டு அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் 'ட்ரான்ஸ் கிச்சன்' உணவக நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்