கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.224 கோடியே 10 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கோவை மாவட்டத்துக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், தெருவிளக்குகள் புனரமைத்தல், குளங்களின் கரையை மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் நடக்கிறது.
நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் 11 நகரங்களில் தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரையை போல், கோவையில் இருக்க கூடிய குளங்களை புனரமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மல்டிலெவல் கார் பார்க்கிங், பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. கோவை மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. கோவையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் அ.தி.மு.க. அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.