கடலூர் மாவட்டம் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்து நடத்திய மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதற்கு மறுத்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் (NLCIL) 19.11.2023 அன்று சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ருத்ர அபிஷேக பூஜைக்கு ஏற்பாடு செய்ததாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்தது. இந்த பிரத்தியேகமான பூஜையானது, என்.எல்.சி இந்தியா லிமிடெட் மற்றும் பாரத தேசத்தின் ஒட்டு மொத்த நலன் மற்றும் வளர்ச்சிக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த பூஜை, முழுக்க என்எல்சிஐஎல் மற்றும் தேசிய நலன் கருதியதாகவும் இருந்ததால், என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள், என்.எல்.சி.ஐ.எல்-ன் மற்ற மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்குமாறு எங்கள் சேவா சங்கம் கேட்டுக் கொண்டிருந்ததின் பேரில் பங்கேற்றனர்.
பூஜைக்கான முழுச் செலவையும் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் அமைப்பு மட்டுமே ஏற்றுக்கொண்டது என்று நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் மேலும் தெளிவுபடுத்துகிறது. இது போன்ற செய்திகளை, அடிப்படை உண்மைகளை சரிபார்க்காமல் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் என்.எல்.சி.ஐஎல் மீது தவறான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம், கடந்த 18 ஆண்டுகளாக ஆன்மீக மற்றும் சமுதாயம் சார்ந்த சேவைகளில் திறம்பட செயலாற்றி வருகிறது. வருடாந்திர மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் சமுதாய வளர்ச்சி சார்ந்த சேவைகளை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தர் மகராஜ் மற்றும் சுவாமி அசோக் மகராஜ் ஆகியோர் நல்லாசி மற்றும் முன்னிலையில் மஹா ஜப ருத்ர அபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.