ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தியிருந்த 3 தனியார் பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்த போது போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பேருந்து ஓட்டுநர்களை வைத்து அந்த ஏர் ஹாரன்களை கழட்டி அப்புறப்படுத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், விதிமீறல் செய்த பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் என மொத்தம் 30,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
போக்குவரத்து விதியை மீறி இதுபோன்ற ஏர் ஹாரன் பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அதே போல் வேகமாக பேருந்துகளை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.