Skip to main content

‘ஆர்.எஸ்.எஸ் பயிற்சி ராணுவ அணிவகுப்பை போன்றது’ - கூட்டத்தில் பேச்சு

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

RSS Rally in tamilnadu

 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு நூறாண்டு கழிந்ததைக் கொண்டாடுகிற வகையில் தமிழகம் முழுக்க பேரணி நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு அனுமதி கேட்டபோது காவல்துறை மறுத்தது. பேரணி மதம், இனம் சார்ந்த பகுதிகளில் ஊடுருவிச் செல்கிறபோது பொது அமைதிக்குப் பங்கம் நேரிடலாம். சட்டம் ஒழுங்கிற்கு சவால் உருவாகலாம் என காவல்துறை சார்பில் சொல்லப்பட்டதால் எப்படியும் நூற்றாண்டு பேரணியை நடத்தியே ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் நீதிமன்றத்தை நாடியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கியே அனுமதிக்கான சட்டப் போராட்டம் நடந்தபோது உயர் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் விக்ரமாதித்திய முயற்சியை மேற்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் சென்றது. பல மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பின் தமிழகத்தின் 45 பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்திக் கொள்ளலாம், பேரணியின் வழிமுறைகள் அதன் வழித்தடங்கள் மற்றும் அமைப்பு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது. காவல்துறை விதிக்கிற கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகே உச்ச நீதிமன்றம் அனுமதியினை வழங்கியிருக்கிறது.

 

அதன்படி ஏப். 16 அன்று தமிழகத்தில் தங்களுக்கு ஏதுவான 45 இடங்களில் பேரணி நடத்த காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரி பட்டியல் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். அவற்றில் சில சென்சிட்டிவ் பகுதிகளை நீக்கிய காவல்துறை, அவர்கள் குறிப்பிட்ட பேரணி வழித்தடங்களிலும் சில மாற்றங்களைக் குறிப்பிட்டும், பேரணியின் போது  ஆயுதங்கள் கொண்டுவரக்கூடாது. மதம் சார்ந்த பாடல்கள், பிற அமைப்புகளுக்கு எதிராக கோஷமிடுதல் கூடாது என 12க்கும் மேற்பட்ட கட்டளைகளைப் பிறப்பித்து அனுமதியளித்தது காவல்துறை.

 

இதுபோன்ற கடுமையான வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் தவிர்த்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டத்தில் பாளை தவிர்த்து அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டத்தின் சென்சிட்டிவ்வான தென்காசி செங்கோட்டை தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ்.சின் கோரிக்கையின் படி சங்கரன்கோவில் என்று மூன்று மாவட்டங்களிலும் 4 நகரங்களில் பேரணி நடத்த அனுமதித்தது காவல்துறை.

 

குறிப்பாக சங்கரன்கோவில் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் தென்மண்டல ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விபாத் பிரச்சாரக் குழுவின் தலைவரான முத்துக்குமார் தலைமையேற்றார். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பேரணியில் கலந்து கொள்ள வந்த அமைப்பினரை மலர்தூவி வரவேற்றனர். பேரணியின்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும் அமைப்பினர் அவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர்.

 

பேரணி முடிவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைப்பாளர்களோ.

 

RSS Rally in tamilnadu

 

ஹிந்து சமுதாயத்தினர் ஒற்றுமையாகவும் கட்டுக் கோப்பாகவும் சீராகவும் அணிவகுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் ஒரு நிகழ்வாக நடத்தப்பட்ட பேரணி இது. சாதாரண மக்களையும் கட்டுப்பாடுடைய குடிமகன்களாக சங்கம் உருவாக்கியுள்ளதை எடுத்துக் காட்டும் விதமாக இந்த அணிவகுப்பு ஊர்வலம் அமைந்துள்ளது. இராணுவ அணிவகுப்பு பயிற்சியைப் போலவே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கொண்டது. அணிவகுப்பிலும் அதனை வெளிப்படுத்தியது என ஷார்ப்பாக முடித்தனர்.

 

தரப்பட்ட கால அவகாசத்திற்குள் பேரணி நடந்து முடிந்தாலும் வரவிருக்கிற தேர்தலை திட்டமாகக் கொண்டு அதன்மூலம், பா.ஜ.க.வை உள்ளடக்கிய இந்த அமைப்புகள் கட்டுக் கோப்பானவை என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளது என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்