ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம், சேலம் மறவனேரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) நடந்தது. மாலையில், பொதுக்கூட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “ஒரு சமுதாயம், தான் யார் என்பதை மறந்து போனால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். நம்முடைய முன்னோர் யார்? நம் மொழி என்ன? உணவுப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து விடக்கூடாது.
நம் நாட்டில் எத்தனையோ பண்பட்ட மொழிகள் இருந்தும், பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்ற அந்நிய மொழியைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். நாம் நம்முடைய சொந்த மொழியை மறந்து கொண்டிருக்கிறோம். மேலாண்மையைக் கற்றுக்கொள்ள நாம் அமெரிக்காவின் மேலாண்மை புத்தகங்களை பயில வேண்டிய தேவை இல்லை. பகவத் கீதையிலும், மஹாபாரதத்திலும் மேலாண்மைக் கோட்பாடுகள் நிறைய உள்ளன. இப்படி நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது.
சனாதன தர்மம் இப்போது பெரிய சர்ச்சை ஆகிவிட்டது. சனாதன தர்மம் இந்த தேசத்துடன் பிறந்தது. அதனோடு வளர்ந்தது. சனாதன தர்மத்தை பாரதம், உலகத்திற்கே அளிக்க வேண்டும் என்றார் அரவிந்தர். நாம் நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளைக் கூறுவதுதான் சனாதன தர்மம்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னார் அவர் இந்துதான். இன்றைக்கு இருக்கும் கொந்தளிப்பான நிலையில் இருந்து மீண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அளிப்பதற்கு சனாதன தர்மம்தான் தேவை. அது எப்போதைக்கும் பொருத்தமானது.
மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அவரை ஏதோ நமக்கு வேண்டாதவர் போல் சிலர் சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அன்று அவர் இருந்த இடம் கொல்கத்தா. அன்று நடந்த கலவரங்களால் அவர் மனம் வெறுத்துப் போய், சுதந்திரத்தைக் கொண்டாடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.
அங்கிருந்து டெல்லிக்கு வந்தார் காந்தி. அங்கும் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது காந்தியின் உதவியாளர் ஒருவர் வந்து, பக்கத்துல முஸ்லிம் லீக் ஆட்கள் நடமாட்டம் இருக்கு. அதனால் காந்தியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறினார். அதையடுத்து, ஸ்வயம் சேவகர்கள் ராத்திரியும், பகலுமாக காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட காந்தி, பேச்சை துவங்கும்போதே, நான் ஒரு சனாதனி ஹிந்து என்று சொல்லித்தான் பேசத் தொடங்கினார். சனாதனி என்பதை இன்றைக்கு ஏதோ கெட்ட வார்த்தை போல பேசுகிறார்கள். அப்போது, சனாதனி என்று கூறிய காந்தி கெட்டவரா? அரவிந்தர் கெட்டவரா? சனாதனம் என்பதை தப்பானது போல இங்கு சிலர் கருத்துருவாக்கம் செய்ய முயலுகின்றனர். எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துகளைச் சொல்வதுதான் சனாதன தர்மம்” என்றார் விவேகானந்தன்.
திடீர் சர்ச்சை:
ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் மறவனேரி பகுதியில் சாலையை முற்றாக ஆக்கிரமித்து நடத்தப்பட்டது. அரசியல் கட்சியினர், இதர சமூக இயக்கங்கள் இதுபோன்ற நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மறவனேரி சாலையில், வழக்கத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மட்டும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இக்கூட்டத்தையொட்டி, நிகழ்ச்சி நடந்த சாலையில் பகல் முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, கியூ பிராஞ்ச், எஸ்.ஐ.யூ., எஸ்.பி.சி.ஐ.டி. ஆகிய அனைத்து வகை உளவுப்பிரிவு காவல்துறையினரும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முழுமையாக வீடியோ கேமராவில் பதிவு செய்தனர்.
வரும் காலங்களில் இதர அமைப்புகளுக்கும் அந்த சாலையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதிக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.