நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணமானது டாஸ்மாக் பணியாளரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாகக் கூறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.