ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
மதுரை நகரிலுள்ள தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது-45). இவர் 2014–ஆம் ஆண்டில் இருந்து திருப்பூர் நகரிலுள்ள பல்லடம் சாலையில் செய்யல்பட்டுவரும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த வங்கியில் திருப்பூர் காந்திநகரை சேர்ந்த ஏற்றுமதி பனியன் நிறுவனம் நடத்தி வரும் மணிமாறன் என்பவர் கணக்கு வைத்துள்ளார். மணிமாறன் தன்னுடைய தொழில் மேம்பாட்டிற்காக கடன் கேட்டு வங்கி மேலாளர் சரவணனை அணுகியுள்ளார்.
அப்போது, வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வைப்புத்தொகை செலுத்தினால், அதுபோல நான்கு மடங்கு தொகை வங்கியின் மூலம் கடன் பெற்று தருவதாக சரவணன் கூறியுள்ளார். இதை நம்பிய மணிமாறன் கடந்த மே மாதம் 26–ந்தேதி ரூ.50 லட்சத்தை தனது வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளார்.
அப்போது வைப்புத்தொகை செலுத்தியதற்கான ஆவணம் எதையும் வங்கி சார்பில் மணிமாறனுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் சரவணன் பல்லடம் சாலையில் உள்ள வங்கி கிளையில் இருந்து பணி மாறுதல் பெற்று சென்னை மேடவாக்கத்தில் உள்ள கிளைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம் வங்கிக்கு சென்ற மணிமாறன் தனது வங்கி கணக்கு குறித்தும், வைப்புத்தொகையாக செலுத்திய பணம் குறித்தும் வங்கி ஊழியர்களிடம் விசாரித்தார். அப்போது தனது வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்ட தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிமாறன், ஏற்கனவே முதுநிலை மேலாளராக இருந்த சரவணனை தொடர்பு கொண்டு தான் வைப்புத்தொகையாக செலுத்திய பணம் குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் அவர் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும், விரைவில் அந்த பணத்தை மணிமாறனின் கணக்கில் வரவு வைத்து விடுவதாக மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்தை மட்டும் மணிமாறனின் கணக்கில் சரவணன் செலுத்தியுள்ளார். ஆனால் மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதுகுறித்த தகவலை மணிமாறன், அந்த வங்கியின் மண்டல மேலாளர் நரேந்திரன் என்பவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மணிமாறன் வைப்புத்தொகையாக கொடுத்த பணத்தை மனோகரன், நந்தினி என்ற வேறு இரு நபர்களின் வங்கி கணக்கில் முறைகேடாக வரவு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கி முதுநிலை மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சிவசுப்பிரமணியம்