நகராட்சியின் சொத்துவரி, குடிநீர் வரி என நிலுவையில் இருக்கும் ரூ.5 கோடி அளவிலான வரியை வசூலிப்பதற்காக மத்திய அரசின் அலுவலகம் தொடங்கி, வங்கி, பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என பல கட்டிடங்களின் முன்னால் குப்பைத்தொட்டியை வைத்து நெருக்கடி கொடுத்துள்ளது காரைக்குடி நகராட்சி.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள நகராட்சிகளில் முதன்மையானது காரைக்குடி நகராட்சி. அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கி எண்ணற்ற கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் இங்குண்டு. வரிப்பணம் இருந்தால் மட்டுமே நகரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் தற்பொழுது வரி வசூலில் தீவிரம் காட்டியுள்ள காரைக்குடி நகராட்சி, மிகப்பெரும் அளவில் வரி நிலுவைத் தொகை வைத்திருப்பவர் யார்..? யார்..? என பட்டியலிட்டு, "இதுவரை சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல வரிகளில் ரூ.5 கோடி அளவிலான வரியை பாக்கி வைத்துள்ளீர்கள். உடனடியாக வரிப்பணத்தை செலுத்த வேண்டுமென" என முதலில் நோட்டீஸ் அனுப்பியது.
நகராட்சி நோட்டீஸ் தானே? என அலட்சியமாக இருந்தவர்களின் கட்டிடங்களான ஐசிஐசிஐ வங்கி, பிஎஸ்என்எல் அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்டவைகளின் வாசலில் அதிரடியாக குப்பைத் தொட்டிகளை நிறுத்திய நகராட்சி ஊழியர்கள், வரி செலுத்தும் வரை குப்பைகளை இங்கு தான் கொட்ட முடியும், வரிப் பணத்தை பைசா பாக்கியில்லாமல் செலுத்தும் பட்சத்தில் வாசலிலுள்ள குப்பைத் தொட்டி அகற்றப்படும் என அறிவிக்கவும் செய்தனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.